Monday, 5 March 2012

கணிப்பொறி விட்டுக் களை எடுக்கத் துடிக்கும் விவசாயி

நெல்லை உட்டு பயிறு பண்ணி, அந்த நாத்த எடுத்து நெட்டி, களையெடுத்து, உப்பப் போட்டு அது அறுப்புக்கு வர்ற வரைக்கும் ஆச ஆசயா புள்ளப்  பெத்து வளத்தர மாதிரி கண்ணும் கருத்துமா பாத்துக்குவோம்.  கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் சின்ன கொழந்த தக்கித் தக்கி நடக்கரதப் போல, பொன்னு சிந்தின மாதிரி பளபளப்பா  வெளஞ்ச  நெல்லு அங்கயும் இங்கயும் ஆடிக்கிட்டு நிக்கறதப் பாக்கறதுக்கே காலங் காத்தால ஆறு மணிக்கு  வரப்புமேல நிப்பேன். காட்டச் சுத்தீலும் வாக்கால்ல தண்ணி ஓடி பசுமையா இருக்கும்,   திடீர்னு சூரியன் வந்துநிக்கும் செவப்புக் கலர்ல, தென்ன மரமெல்லாம் அதப்  பாத்து பூரிச்சு நிக்கும், நெல்லம் பயிறுள பனித்துளி மினு மினுப்பா சிரிக்கும். அந்தப் பனித் துளிய எல்லாம் கன்னத்துல தேச்சுக்குவேன் அப்பிடி ஒரு சில்லுனு இருக்கும் அப்றோம் தொடச்சுக்குவேன் மருவடீமு பனித் துளிய  கன்னத்துல தேச்சுக்குவேன். சூப்பரா இருக்கும் தெரீமா. எங்கூட்ல பேசுவாங்க(திட்டுவாங்க).  நானு  காத்தால கண்ண முழிச்சுப்  பார்கறதே நெல்லங் காட்டுல தான். சினிமால காட்ரதப் போலவே தானுங்க இங்க ரொம்ப சூப்பரா இருக்கும் காடு தோட்டமெல்லாம். நெல்லு அறுக்கற சமயமெல்லாம் எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.  நெல்ல அறுக்க ஒவ்வொருத்தரு காட்டுக்கும் கொறஞ்சது இரவது முப்பது ஆளுங்க வருவாங்க, காபி வெச்சு ஊத்தறது, நெல்ல அருத்தாந்து களத்துல அடிக்க ஏற்பாட்டச் செய்யறது, நெல்ல வேவிக்கோணும், காயவெக்கோணும், இப்டி ஒரு பத்து இரவது நாளும்  எங்க ஊடே ஊரா இருக்கும். கொள்ளப் பிரீமா இருக்கும் எனக்கெல்லாம்.

நெல்ல அறுத்து மாட்டு வண்டீல கொண்டாந்து,  களத்துல கொட்டி கையாள அடிப்போம் . நா சின்னப் புள்ளயா இருக்கும் போது பள்ளிகோடம் உட்டு பைய வச்சிட்டு மொத வேலையா களத்துக்கு தான் போவேன். (இப்போ புள்ளங்க டியுசனுக்கு தான் போகுதுங்க பையா வெச்சுப்போட்டு) கோயல்ல பஞ்சாமிர்தம் வாங்க எம்பிகிட்டு நிக்கறத போல நா கருதடிக்க (நெல்) ஆசையா நிப்பேன். சின்ன புல்லேங்கரதுனால சின்ன கத்தையா   கொடுப்பாங்க. அடிச்சு முடிச்சா மொழங்கு ஒட்டிகும் கை எல்லாம் ஒரே பிப்பா இருக்கும், ஆனா அது சுகமா தான் இருக்கும்.

நெல்ல அடிச்சு போட்டு, ஊற வச்சு, வேக வைப்பாங்க. என்ஜோட்டுல ஒரு ஆறு பேரு சித்தப்பா பசங்க,புள்ளங்க  இருப்போம், வேவுச்ச நெல்லு மணத்தைப் புடிக்கவே எங்களுக்கு ஒரே போட்டியா இருக்கும், ஊடு முச்சூடும் மண மணக்கும். வாசல்ல கொட்டினா ஆவி பறக்க பறக்க இழுத்த அந்த வாசம் நெஞ்சு முழுக்க இன்னும் மணமணத்துக் கெடக்குது.

 நெல்லு வேவிச்சு முடிச்சு வாசல்ல காயும் ரண்டு மூணு நாள் வர (சரியான பதம் தெரீல). அதுவர நெல்ல தொலாவி உடோனும் இபோ போல வசதி எல்லாம் கிடையாது. பள்ளிக்கோடம் உட்டும் உடாமையும் ஓடி வருவோம் நெல்லுத் தொலாவரதுக்கு. எங்காயா, அய்யன், இல்ல அப்பா அம்மா தொலாவிட்டு இருப்பாங்க. (தொலாவி - நெல் காய வைப்பது) அவங்க கூட நாங்களும் தொலாவுவோம், காலுல நெல்லு முனை குத்தும் ஆனாலும் அந்த வலியுமே கூட அப்போ ஒரு சந்தோசத்ததான் தந்துச்சு. மனசு முழுக்க ஏதாவது ஒரு பூரிப்பு வந்து தொத்திக்கிடே கிடக்கும் பட்டாம்பூச்சியா

  அப்றோம் காயவச்சி, வண்டி பூட்டி நெல்லடிச்சி கொண்டாந்து....
 சோராக்கி மொதல் கவளம் உள்ள போகும் போது.... நெல்ல நாத்து நெட்டினதுலருந்து, அறுத்து, அடிச்சி எல்லாம் பண்ணின அந்த சந்தோசமான நிமிசமெல்லாம் அந்த சோத்துல தெரியும். புள்ளத்தாச்சி புள்ளைய ஆஸ்பத்திரில மொதல் மொதலா முத்தங்க்கொடுக்கறது போல கொள்ள சந்தோசமா இருக்கும் அந்த மொதல் கவளம் உள்ளுக்குள்ள


விவசாயம் தொழிலா எனக்கு தெரிஞ்சு யாரும் பண்ணல. வாழ்வா தான் இருந்துச்சு . ஐயாயிரம், பத்தாயிரம் கைமாத்து வாங்கினா எல்லாம் இப்போ போல பத்திரம் கித்திரமெல்லாம் எழுதிக் கொடுக்கறது இல்ல, சொல்லுப் பேச்சு மட்டும் தான். ஒரு நேர்த்தி, கண்ணியம் இருந்துச்சு.

நா சொன்னதெல்லாம் ஏதோ எங்கப்பா சின்னப்   பயன்னா இருக்கும் போதோ எங்கையன் (தாத்தா) காலத்திலையோ இல்ல, என் கண்ணு முன்னாடி போன பதினஞ்சு, இரவது வருசத்துக்குள்ள நடந்து முடிஞ்சு போனது.


இப்போ களமில்லை,காய வைக்க திராணி இல்லை,வேவிக்க விறகுக்கு பதில்
விறகாகிக் கெடக்கறோம் விவசாயிகள். சந்தோசப் பட்டுக் கிடக்க வேண்டிய பொடுசுகள்  எல்லாம் டியூசனில் கசங்கி கெடக்குதுங்க. நெலத்த வித்தா ஏதோ புள்ளையும் பையனும் ஓடிப் போனதப் போல சனங்க பேசிக்குவாங்க அதிசயமா, நடக்க கூடாதது போல ஆனா இப்போ சர்வ சாதாரணமா வெல்லாம நெலம் விற்பனைகுன்னு போர்டு மாட்டி வச்சிருக்கோம்.  


இப்போ நாங்க இருக்கறது கிராமத்துல தான். ஆனா எங்கூட்ல டவுனுக் காரங்க போல தான் காசு கொடுத்து அரிசி வாங்கறோம். அந்தச் சோத்த
திங்கும் போது உயிர் இல்லாத மாதிரி இருக்கு. ஒரு ருசி பாக்க முடீல, அதுல சுகம் இல்ல, பூரிப்பு வரல.


புள்ள செத்துப் போன அம்மாவா வலியை உணர்கிறேன். நான் பாத்து பாத்து பூரிச்சுக் கிடந்த மண்ணு. ஆண்டாண்டு காலம் கொண்டாடி செய்த எங்க குலத் தொழில் இது. இப்போ லச்சத்துக்கு,கோடிக்கு வெள்ளாம நெலத்தையே விக்கறோம். எனக்கு அத பாக்கும் போதெல்லாம் பத்திகிட்டு வருது (விவசாயியோ, வாங்குபவரோ பற்றி  இல்லை இது ) வெள்ளாம நெலம் சாமி மாதிரி. அதப் போயி வித்தா? எங்க கண் முன்னே பலியாடு போலே கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டு  வருகிறது விவசாயம்.

யாறீங்க சொல்லி வைக்கறது? எல்லாருமே கணிபொறி தட்ட ஆசை படுரோமே என்ன பண்றது?, விவசாயம் பார்க்கற பசங்கள எந்தப் புள்ளையும் கட்டிக்க மாட்டேங்குது , இத எங்க போயிச் சொல்றது?. ஆள் கூலி பண மரத்து ஒசரத்துக்கு நிக்குது. முட்டுவளிச் செலவுக்கே ஊட்டுல ஒரு ஆளு தனியா சம்பாரிக்கோணும்.  நாய் படாப் பாடு படுறோம்.

நேத்து வருஷம் (2011 ) மஞ்சளு ஓகோனு வித்துச்சு, அதனால இந்தப்பூட்டு எல்லாரும் மஞ்சப் போட்டோம். முட்டுவளிச் செலவு, வெத மஞ்சளு, ஆளுக கூலி, வெட்டுக் கூலி எல்லாம் மானத்து ஒசரத்துக்கு ஏறிப் போச்சு ஆனா  விக்கற வெல பாதாளத்துல கெடக்குது. எங்கூர்ல அப்படியே காட்டோட அழுக உட்ரலாமனு பேசிக்கறாங்க. ஒரு நாலு, ரண்டு நாலு வெள்ளாமையா?    வருசத்து வெள்ளாமிங்க, எத வெச்சு பொழைக்கிறது?, பாட்ட, முப்பாட்ட, அய்யன் உசுரா கெடந்து பாடுபட்ட நெலத்த வித்து புள்ள குட்டிய படிக்க வைக்கறோம்.. வேற எனத்தப் பண்றது?
இல்ல அப்டிப் பண்ணாதிங்க அப்டீன்னு இதப் படிச்சிப் போட்டுச் சொல்ற உங்க ஊட்டுக்கு வர்றதா நாங்க எல்லா?

எனக்கு கலைவெட்டுறது, பில்லுப் புடுங்கறது, தண்ணி கட்டுறது, சோளத்தட்டு அறுக்கறது, தோவை உரிக்கறது (தோவை - கரும்பில்  இருக்கும் இத மாடு, எருமைக்கு தீனியா போடுவாங்க)  இந்த வேலை எல்லாம் தான் ரொம்ப பிடிக்கும். இவ்வளவு சீக்கிரம் நொடிஞ்சது போலவே விவசாயம் என் கண் முன்னாடியே ஓங்கி எழும் . அப்போ நானும் திடீர்னு வந்த கணிப்பொறி விட்டு காட்டுக்குள்ள நிப்பேன் ஒரு விவசாயியா மீண்டும்.



























1 comment:

  1. I can feel your pain. But I am helpless :( After killing you people, One day this world gonna eat mouse and keyboard.

    ReplyDelete