Monday, 5 March 2012

கணிப்பொறி விட்டுக் களை எடுக்கத் துடிக்கும் விவசாயி

நெல்லை உட்டு பயிறு பண்ணி, அந்த நாத்த எடுத்து நெட்டி, களையெடுத்து, உப்பப் போட்டு அது அறுப்புக்கு வர்ற வரைக்கும் ஆச ஆசயா புள்ளப்  பெத்து வளத்தர மாதிரி கண்ணும் கருத்துமா பாத்துக்குவோம்.  கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் சின்ன கொழந்த தக்கித் தக்கி நடக்கரதப் போல, பொன்னு சிந்தின மாதிரி பளபளப்பா  வெளஞ்ச  நெல்லு அங்கயும் இங்கயும் ஆடிக்கிட்டு நிக்கறதப் பாக்கறதுக்கே காலங் காத்தால ஆறு மணிக்கு  வரப்புமேல நிப்பேன். காட்டச் சுத்தீலும் வாக்கால்ல தண்ணி ஓடி பசுமையா இருக்கும்,   திடீர்னு சூரியன் வந்துநிக்கும் செவப்புக் கலர்ல, தென்ன மரமெல்லாம் அதப்  பாத்து பூரிச்சு நிக்கும், நெல்லம் பயிறுள பனித்துளி மினு மினுப்பா சிரிக்கும். அந்தப் பனித் துளிய எல்லாம் கன்னத்துல தேச்சுக்குவேன் அப்பிடி ஒரு சில்லுனு இருக்கும் அப்றோம் தொடச்சுக்குவேன் மருவடீமு பனித் துளிய  கன்னத்துல தேச்சுக்குவேன். சூப்பரா இருக்கும் தெரீமா. எங்கூட்ல பேசுவாங்க(திட்டுவாங்க).  நானு  காத்தால கண்ண முழிச்சுப்  பார்கறதே நெல்லங் காட்டுல தான். சினிமால காட்ரதப் போலவே தானுங்க இங்க ரொம்ப சூப்பரா இருக்கும் காடு தோட்டமெல்லாம். நெல்லு அறுக்கற சமயமெல்லாம் எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.  நெல்ல அறுக்க ஒவ்வொருத்தரு காட்டுக்கும் கொறஞ்சது இரவது முப்பது ஆளுங்க வருவாங்க, காபி வெச்சு ஊத்தறது, நெல்ல அருத்தாந்து களத்துல அடிக்க ஏற்பாட்டச் செய்யறது, நெல்ல வேவிக்கோணும், காயவெக்கோணும், இப்டி ஒரு பத்து இரவது நாளும்  எங்க ஊடே ஊரா இருக்கும். கொள்ளப் பிரீமா இருக்கும் எனக்கெல்லாம்.

நெல்ல அறுத்து மாட்டு வண்டீல கொண்டாந்து,  களத்துல கொட்டி கையாள அடிப்போம் . நா சின்னப் புள்ளயா இருக்கும் போது பள்ளிகோடம் உட்டு பைய வச்சிட்டு மொத வேலையா களத்துக்கு தான் போவேன். (இப்போ புள்ளங்க டியுசனுக்கு தான் போகுதுங்க பையா வெச்சுப்போட்டு) கோயல்ல பஞ்சாமிர்தம் வாங்க எம்பிகிட்டு நிக்கறத போல நா கருதடிக்க (நெல்) ஆசையா நிப்பேன். சின்ன புல்லேங்கரதுனால சின்ன கத்தையா   கொடுப்பாங்க. அடிச்சு முடிச்சா மொழங்கு ஒட்டிகும் கை எல்லாம் ஒரே பிப்பா இருக்கும், ஆனா அது சுகமா தான் இருக்கும்.

நெல்ல அடிச்சு போட்டு, ஊற வச்சு, வேக வைப்பாங்க. என்ஜோட்டுல ஒரு ஆறு பேரு சித்தப்பா பசங்க,புள்ளங்க  இருப்போம், வேவுச்ச நெல்லு மணத்தைப் புடிக்கவே எங்களுக்கு ஒரே போட்டியா இருக்கும், ஊடு முச்சூடும் மண மணக்கும். வாசல்ல கொட்டினா ஆவி பறக்க பறக்க இழுத்த அந்த வாசம் நெஞ்சு முழுக்க இன்னும் மணமணத்துக் கெடக்குது.

 நெல்லு வேவிச்சு முடிச்சு வாசல்ல காயும் ரண்டு மூணு நாள் வர (சரியான பதம் தெரீல). அதுவர நெல்ல தொலாவி உடோனும் இபோ போல வசதி எல்லாம் கிடையாது. பள்ளிக்கோடம் உட்டும் உடாமையும் ஓடி வருவோம் நெல்லுத் தொலாவரதுக்கு. எங்காயா, அய்யன், இல்ல அப்பா அம்மா தொலாவிட்டு இருப்பாங்க. (தொலாவி - நெல் காய வைப்பது) அவங்க கூட நாங்களும் தொலாவுவோம், காலுல நெல்லு முனை குத்தும் ஆனாலும் அந்த வலியுமே கூட அப்போ ஒரு சந்தோசத்ததான் தந்துச்சு. மனசு முழுக்க ஏதாவது ஒரு பூரிப்பு வந்து தொத்திக்கிடே கிடக்கும் பட்டாம்பூச்சியா

  அப்றோம் காயவச்சி, வண்டி பூட்டி நெல்லடிச்சி கொண்டாந்து....
 சோராக்கி மொதல் கவளம் உள்ள போகும் போது.... நெல்ல நாத்து நெட்டினதுலருந்து, அறுத்து, அடிச்சி எல்லாம் பண்ணின அந்த சந்தோசமான நிமிசமெல்லாம் அந்த சோத்துல தெரியும். புள்ளத்தாச்சி புள்ளைய ஆஸ்பத்திரில மொதல் மொதலா முத்தங்க்கொடுக்கறது போல கொள்ள சந்தோசமா இருக்கும் அந்த மொதல் கவளம் உள்ளுக்குள்ள


விவசாயம் தொழிலா எனக்கு தெரிஞ்சு யாரும் பண்ணல. வாழ்வா தான் இருந்துச்சு . ஐயாயிரம், பத்தாயிரம் கைமாத்து வாங்கினா எல்லாம் இப்போ போல பத்திரம் கித்திரமெல்லாம் எழுதிக் கொடுக்கறது இல்ல, சொல்லுப் பேச்சு மட்டும் தான். ஒரு நேர்த்தி, கண்ணியம் இருந்துச்சு.

நா சொன்னதெல்லாம் ஏதோ எங்கப்பா சின்னப்   பயன்னா இருக்கும் போதோ எங்கையன் (தாத்தா) காலத்திலையோ இல்ல, என் கண்ணு முன்னாடி போன பதினஞ்சு, இரவது வருசத்துக்குள்ள நடந்து முடிஞ்சு போனது.


இப்போ களமில்லை,காய வைக்க திராணி இல்லை,வேவிக்க விறகுக்கு பதில்
விறகாகிக் கெடக்கறோம் விவசாயிகள். சந்தோசப் பட்டுக் கிடக்க வேண்டிய பொடுசுகள்  எல்லாம் டியூசனில் கசங்கி கெடக்குதுங்க. நெலத்த வித்தா ஏதோ புள்ளையும் பையனும் ஓடிப் போனதப் போல சனங்க பேசிக்குவாங்க அதிசயமா, நடக்க கூடாதது போல ஆனா இப்போ சர்வ சாதாரணமா வெல்லாம நெலம் விற்பனைகுன்னு போர்டு மாட்டி வச்சிருக்கோம்.  


இப்போ நாங்க இருக்கறது கிராமத்துல தான். ஆனா எங்கூட்ல டவுனுக் காரங்க போல தான் காசு கொடுத்து அரிசி வாங்கறோம். அந்தச் சோத்த
திங்கும் போது உயிர் இல்லாத மாதிரி இருக்கு. ஒரு ருசி பாக்க முடீல, அதுல சுகம் இல்ல, பூரிப்பு வரல.


புள்ள செத்துப் போன அம்மாவா வலியை உணர்கிறேன். நான் பாத்து பாத்து பூரிச்சுக் கிடந்த மண்ணு. ஆண்டாண்டு காலம் கொண்டாடி செய்த எங்க குலத் தொழில் இது. இப்போ லச்சத்துக்கு,கோடிக்கு வெள்ளாம நெலத்தையே விக்கறோம். எனக்கு அத பாக்கும் போதெல்லாம் பத்திகிட்டு வருது (விவசாயியோ, வாங்குபவரோ பற்றி  இல்லை இது ) வெள்ளாம நெலம் சாமி மாதிரி. அதப் போயி வித்தா? எங்க கண் முன்னே பலியாடு போலே கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டு  வருகிறது விவசாயம்.

யாறீங்க சொல்லி வைக்கறது? எல்லாருமே கணிபொறி தட்ட ஆசை படுரோமே என்ன பண்றது?, விவசாயம் பார்க்கற பசங்கள எந்தப் புள்ளையும் கட்டிக்க மாட்டேங்குது , இத எங்க போயிச் சொல்றது?. ஆள் கூலி பண மரத்து ஒசரத்துக்கு நிக்குது. முட்டுவளிச் செலவுக்கே ஊட்டுல ஒரு ஆளு தனியா சம்பாரிக்கோணும்.  நாய் படாப் பாடு படுறோம்.

நேத்து வருஷம் (2011 ) மஞ்சளு ஓகோனு வித்துச்சு, அதனால இந்தப்பூட்டு எல்லாரும் மஞ்சப் போட்டோம். முட்டுவளிச் செலவு, வெத மஞ்சளு, ஆளுக கூலி, வெட்டுக் கூலி எல்லாம் மானத்து ஒசரத்துக்கு ஏறிப் போச்சு ஆனா  விக்கற வெல பாதாளத்துல கெடக்குது. எங்கூர்ல அப்படியே காட்டோட அழுக உட்ரலாமனு பேசிக்கறாங்க. ஒரு நாலு, ரண்டு நாலு வெள்ளாமையா?    வருசத்து வெள்ளாமிங்க, எத வெச்சு பொழைக்கிறது?, பாட்ட, முப்பாட்ட, அய்யன் உசுரா கெடந்து பாடுபட்ட நெலத்த வித்து புள்ள குட்டிய படிக்க வைக்கறோம்.. வேற எனத்தப் பண்றது?
இல்ல அப்டிப் பண்ணாதிங்க அப்டீன்னு இதப் படிச்சிப் போட்டுச் சொல்ற உங்க ஊட்டுக்கு வர்றதா நாங்க எல்லா?

எனக்கு கலைவெட்டுறது, பில்லுப் புடுங்கறது, தண்ணி கட்டுறது, சோளத்தட்டு அறுக்கறது, தோவை உரிக்கறது (தோவை - கரும்பில்  இருக்கும் இத மாடு, எருமைக்கு தீனியா போடுவாங்க)  இந்த வேலை எல்லாம் தான் ரொம்ப பிடிக்கும். இவ்வளவு சீக்கிரம் நொடிஞ்சது போலவே விவசாயம் என் கண் முன்னாடியே ஓங்கி எழும் . அப்போ நானும் திடீர்னு வந்த கணிப்பொறி விட்டு காட்டுக்குள்ள நிப்பேன் ஒரு விவசாயியா மீண்டும்.



























Thursday, 2 February 2012

ஈரோடு மின்சார அலுவலகத்தின் லஞ்ச ராஜ்ஜியம்


இதப் படிக்கற சாமியோ கும்புடுறனுங்க....

 அட எங்க பக்கத்தூட்டு மாமாவும் சரி அண்ணா கசாறேவும் சரி அப்படி என்னத்த தான் நாடே லஞ்சத்தில மொதக்குது மொதக்குதுன்னு சொல்ராங்கன்னு பொட்டாட்ட ஊட்ல உக்காந்துட்டு யோசிட்டுகிட்டே இருப்பேன். ( ப்ளஷ்பக் ல கசாறே தாத்தாவ நெனச்சுக்குங்க)

ஈரோடு மாவட்டத்தில்  என்னுடைய கிராமத்தில் நடந்தது.
 ஊர் பேர வெளிய சொன்னா போட்டு தள்ளிட்டாங்கனா ???!!!   அதனால யோசிச்சு அப்பறமா சொல்றேன் :)

 (கீழ்ப்படி நிகழ்வு நடந்தது ஒரு மாதத்திற்கும் மேல்) 

நேத்து காத்தால  எம்பட அக்காட்ட சொல்லிட்டு இருந்தேன்.
"எம்படகிட்ட  இதுவர யாருமே லஞ்சங்கேட்டதே இல்லன்னு" (நா ஏதாவது கவுருமென்டு ஆபீசுக்கு போயிருந்தாதானே அவங்க கேக்கறதுக்கு)

கிட்டத்தட்ட பத்து நாலா எங்க ஊட்டுக்கு தனியா கரண்டு சர்வீசு வாங்கறதுக்கு எல்லா வேலையும் செஞ்சிட்டு இருந்தோம்.
இன்னிக்கு காத்தால என்னய  கரண்டு ஆபிசுக்கு போயி சர்வீசு வாங்க apply  பண்ணிட்டு பணமும்  கட்டிட்டு வானு சொன்னாங்க. (எப்படா வீட்ட உட்டு வெளிய போவோம்னு எம்பிகிட்டு நிப்பேன் நான், கேக்கவா வேனும்)..  சரின்னு கெளம்பி போனேன்.

 என் மூஞ்சிலேயே எழுதி ஒட்டி வெச்சுட்டான் இந்த லூஸ் கடவுள். என்ன  எழுதி ஒட்டி வெச்சுட்டான்னு கேக்கறிங்களா  ??? அதாங்க "லூசுன்னு" ஒட்டி வெச்சுட்டான். பேக்கு பேக்குன்னு  ஆபிசுக்குள்ள போனேன், எங்க ஊரு லையின் மேன் வந்தாரு. சிரிச்சு உபசரிச்சு, உக்கார சொன்னாரு. கவருமெண்டு ஆபீசுக்கு போனா இப்பிடி  VIP போல மரியாதை கெடைக்கும்னு தெரீல. நல்லா உபசரிக்கராங்கனு சந்தோசப்ப்பட்டுகிட்டு உக்காந்துட்டு இருந்தேன்.

கண்ணுக்கு நேரா கொட்ட கொட்ட எழுதில "லஞ்ச விழிப்பு  அலுவலகத்தின் முகவரியை போர்டு போட்டு வச்சிருந்தாங்க. (கெடக்கறதெல்லாம்  கெடக்கட்டும் கெலவிய தூக்கி ஏன் மனைல வச்சாங்க)     

உள்ள போயிட்டு வந்த லையின் மேன் என்னய  வெளிய கூபிட்டாரு. நானும் பேக்கு பேக்குன்னு போனேன். "ஒரு 300, 400  சேர்த்துக் கட்டிடுங்க, ஆபீசுல AE  கு, லொட்டுகு, லொசுக்குக்கு ன்னு சொன்னாரு. (யாரு ஊட்டுக் காச இவ்ளோ உரிமையா கேக்கறாரு இவரு?). அவரு சொன்னதுக்கெல்லாம் ஆமா சாமி போட்டு மறுபடியும் உள்ள போயி காத்திருந்தேன்.


AE  கூப்பிட்டாரு. உள்ள போனேன். விண்ணப்பத்தை எல்லாம் சரி பார்த்திட்டு பணம் கட்டிட்டு வர சொன்னாரு. சரின்னு சொன்னேன். எவ்ளோ கொண்டு வந்திருக்கிங்கன்னு கேட்டாரு. நான் Rs.1650  ன்னு சொன்னேன்.                 (அவ்ளோ தான் என்கிட்ட அப்போ வீட்ல  கொடுத்து விட்டாங்க). அவரு " இது கட்டுற  பணம், மேல எவ்வளவு கொண்டு வந்து இருக்கிங்கனு" கேட்டாரு.
நா Rs. 1650  தான் கொண்டு வந்திருக்கேங்க ன்னு சொன்னேன். AE  சாமி " லையின் மென்  சொல்லி விடலையா உங்ககிட்ட" அப்டீன்னு கேட்டாரு. (அதாவது லஞ்சம் கொண்டு வரச் சொல்லி லையின் மென்  சொல்லலையா அப்டீன்னு அர்த்தமுங்க).

நான், " தனி சர்வீசு வாங்க இங்க கட்ற பணம் எவ்வளவுங்கன்னு கேட்டேன், அவரு Rs. 1650  தான், மீட்டர் போர்டு கொண்டு வர ஈரோடு போகணும், அதுக்கு போக்குவரத்து, இதர செலவு என்று மொத்தம் Rs .௨௦௦௦ ஆகும்  அப்டீன்னாரு. எல்லாருமே Rs .2000  தான் கட்றாங்க அப்டீன்னு வேற சொன்னாரு (எல்லார்டையும் லஞ்சம் வாங்கறாங்க)

 (நம்மளுக்கு தான் கொம்பு வந்திருக்குல்ல, பெரியவங்க, பெரிய ஆபீசருங்க   சொன்னா கேள்வி மேல கேள்வி கேட்போமே) . நானும் " இல்லீங்க சார் போக்குவரத்து, இதர செலவுக்கு எல்லாம் கவுருமென்டு கொடுக்காதா" ன்னு கேட்டேன், இது தாங்க கேட்டேன். AE அய்யாவுக்கு கோவம் வந்திருச்சு போல... "இங்க பாருங்க உங்களுக்கு இஷ்டமிருந்த Rs .2000 கட்டுங்க இல்லாட்டி Rs. 1650  மட்டும் கட்டுங்க, ரூல்ஸ் எல்லாம் பேச வேண்டாம்னு சொன்னாரு . (சத்யமா எனக்கு எந்த ரூல்ஸ்மே தெரியாது, புரியலன்னு  கேள்வி தானுங்க கேட்டேன்)

அப்றோம் பில் section  ல போயி பணத்த கட்டிட்டு பில்ல பார்த்தேன். அதுல தனியா "சர்வீஸ் சார்செஸ்" ன்னு போட்டு ஒரு குறிப்பிட்ட தொகை இருக்கு (அய்யா AE  குறித்துக்கொள்ளுங்கள்). என்கிட்டே பணம் Rs. 1650  பதிலாக Rs. 1700    கேட்டாங்க. எதுக்குனு கேட்டதுக்கு Rs .50 கணிப்பொறியில என்னுடைய விவரங்களை ஏற்றுவதற்கு அப்டின்னாக. சரிங்க Rs .50 கும் பில் ல போட்டு கொடுங்க ன்னு கேட்டேன். அவங்க இது பில்ல்லுல வராது அப்டினாங்க. (தேநீர் செலவுக்கோ இருக்குமோ, சரி விடுங்க).

இது இப்டி... சரி எப்போ சரிவீசு கொடுப்பிங்க அப்டீன்னு கேட்டா அதுக்கும் ரெண்டு மாசம் மேல ஆகிடும், ஈரோடு ல இருந்து வரும். அப்டிங்கறாங்க. சரி அதுக்கு  இவங்க ஒன்னும் செய்ய முடியாது தான். ரெண்டு மாசம் கழிச்சு வர்றதுக்கு எங்க லஞ்சம்?. காரியம் ஒடனே முடிக்க லஞ்சம் சரி,  இதுகெதுக்குங்க எல்லார்டையும் லஞ்சம் வாங்கறிங்க?. (சரி என்னமோ போங்க).

அந்த அருமையான மின்சார  அலுவலகம் அமைந்துள்ள இடம் ஈரோடு மாவட்டம் , பெருந்துறை வட்டம், காஞ்சிக்கோவில். விசாரிச்சதில கஞ்சிகோவில்  மின்சார அலுவலகத்தைப் பொறுத்த வரை லஞ்சம் கொடுத்தா தான் வேலை நடக்கும்ன்னு சொல்றாங்க.

இன்ன வரைக்கும் சர்வீசு தரலிங்க (இதற்கு நான் கஞ்சிகோவில் அலுவலகத்தை குறை சொல்லவில்லை). ஒழுங்கா கரண்டும் வரதில்லிங்க, இனி கரண்டு பில்லுக்கே தனியா ஊட்டுக்கு ரெண்டு பேரு சம்பாதிக்க  வேண்டி வரும் போல, இதுல ஏங்க அப்றோம் லஞ்சம் வாங்கி வெறுப்ப ஏத்துரிங்க?

சம்மந்தப் பட்ட அதிகாரிகள் கவனிப்பீர்களா ?!!!. ஆதங்கம் மற்றும் மிகுந்த வருத்தங்களுடன் நான். (அசுக்கு புசுக்கு பெயர் சொல்ல மாட்டேன்)